புதன், 17 பிப்ரவரி, 2016

தமிழகத்தின் மாநில மரம் பனை.

தமிழகத்தின் மாநில மரம் பனை.
புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பல பயனுள்ள பயன்களைத் தருகின்றது.
மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர்.
கரும் பாறையைப் போன்ற உறுதியான பனையின் தண்டுப்பகுதி குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பனங்கையாகவும் பனம் வரிச்சலாகவும் சிறு கால்வாய்கள், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலமாகவும் பயன்படுகிறது.
பல சங்க இலக்கிய நூல்கள் கிடைக்கப் பெற்றது ஓலைச்சுவடி என்று சிறப்பித்து கூறும் பனை ஓலையால்தான். திருவள்ளுவர் என்றதும் நம் நினைவில் தோன்றுவது ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் ஏந்திய திருவள்ளுவரைத்தான். ஒரு வேலை பனை இல்லை என்றால் சங்கத்தமிழ் நூல்களும் பல வரலாற்றுக் குறிப்புகளும் நமக்கு கிடைக்காமலேகூட போயிருக்கலாம்.
சங்க காலத்தில் செய்திப் பரிமாற்றங்கள் பனை ஓலையில்தான் நடைபெற்றன. கடும் புயலைக்கூட தாங்கி நிற்ககூடிய வீடுகளை நம்முன்னோர் பனை ஓலையால்தான் முடைந்தனர். தோல் பொருள்கள் பிளாஸ்டிக் பொருள்களின் வரவுக்கு முன்னால் பனை ஓலைகளைக் கொண்டுதான் கூடைகள், சாப்பிட உதவும் தொன்னைகள், குதிர்கள், பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை நம் முன்னோர் செய்து பயன்படுத்தினர். பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருள்கள் எளிதில் கெட்டுப் போவதில்லை. இன்றும்கூட சில கிராமப்புறங்களில் உணவுகளைப் பனை ஓலையில்தான் கொடுப்பார்கள்.
மின்சார வரவுக்கு முன்னால் வெயில் காலங்களில் பனை விசிறிக்கு நமக்கு பெரிதும் உதவின. நிறைய விளையாட்டு பொருள்கள் செய்ய பனை பயன்படுகிறது. பனையில் நொங்கு வண்டிகள், காத்தாடிகள், பனை விதைப் பொம்மைகள் செய்து சிறுவர்கள் விளையாடினர். பனை ஓலையைத் தாங்கி நிற்கக் கூடிய மட்டை, வீடுகளைச் சுற்றி வேலி அமைக்கவும், தடுப்புத்தட்டிகள் பின்னுவதற்கும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. வெயில் காலங்களில் அற்புதம் பனை நொங்கு. தித்திக்கும் சுவையுடைய ஜெல்லி போன்ற நொங்கின் சுளை வெயில் காலங்களில் ஒரு சிறந்த குளிர் பானமாகவும், தாதுப் பொருள்கள், விட்டமின்கள், நீர்சத்துக்களைக் கொண்ட மருந்தாகவும் பயன்படுகிறது.
முளைத்து கிழங்கு விட்ட பனை விதை மிகச் சிறந்த சிற்றுணவாக பயன்படுகிறது. அதில் அதிக அளவு நார்சத்துக்கள். தாதுப் பொருட்கள் உள்ளன. பனையிலிருந்து கிடைக்கப்பெறும் பதனீர் ஒரு சிறந்த குளிர்ச்சிபானமாகும். பதனீரைக் காய்ச்சி பனைவெல்லம் (கருப்பட்டி) செய்யப்படுகிறது. பனைவெல்லம் ஒரு சிறந்த மருத்துவ குணமுடைய இனிப்பு பொருளாகும்.
மனித சமுதாயத்திற்கு இவ்வளவு பயன்களை அளித்த பனை மரங்கள் இன்று மனிதனின் பார்வையில் பயனற்று நிற்கின்றன.
பனைச்சட்டங்களும் ஓலைக்குடிசைகளும் மாறி காங்கிரிட் வீடுகளாக்கப்பட்டன. ஓலைச்சுவடிகள் மாறி குருந்தகடானது. கருமையான பனம் கருப்பட்டியை விட்டு வெள்ளை சீனியை விரும்புகின்றோம். இன்றைய நாகரிக வளர்ச்சியில் காடுகள் பெருமளவிற்கு அழிக்கப்பட்டதால் பல உயிரினங்களின் உயிர் ஆதாரமாக பனைமரங்களே விளங்குகின்றன.
கூட்டமான மரங்களைக் கொண்ட காடுகள் பெருமளவிற்கு அழிக்கப்பட்டதால் பல உயிரினங்களின் உயிர் ஆதாரமாக பனை மரங்களே விளங்குகின்றன.
கூட்டமான மரங்களைக் கொண்ட காடுகள் அழிக்கப்பட்ட பின்னர் இரவில் வாழ்க்கை நடத்தும் பல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பகல் பொழுதில் ஓய்வெடுக்கவும், எதிரிகளிடமிருந்து ஒளிந்துகொள்ள உதவும் ஒரு முக்கிய இடமாகவும் பனையே விளங்குகிறது.
பனையின்வேர் பகுதிகளில் எறும்புகளும், பூச்சிகளும் பல சிறு செடிகளும் வாழ்கின்றன. பனையின் வேர்ப்பகுதியில் விழும் தாவரங்களின் விதைகள் பனையைச் சுற்றியும் ஒட்டியும் வளர்கின்றன. இயற்கையில் ஆலமரங்களும் அரச மரங்களும் பெரும்பாலும் பனையை ஒட்டி வளர்பவையே.
பனையின் தண்டுப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு பல வகையான ஓணான்களும் பல்லி இனங்களும் வாழ்கின்றன. பனையின் கழுத்து பகுதிகளிலும் பனை ஓலைகளிலும் பல வகையான வெளவால்களும் சிறு குருவிகளும் வாழ்கின்றன. ஒரு வெளவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும் கொசுக்களையும் பிடித்து உண்டு விவசாயம் செழிக்க நமக்கு உதவுகிறது.
பனையின் தண்டுப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு பல வகையான ஓணான்களும் பல்லி இனங்களும் வாழ்கின்றன. பனையின் கழுத்து பகுதிகளிலும் பனை ஓலைகளிலும் பல வகையான வெளவால்களும் சிறு குருவிகளும் வாழ்கின்றன. ஒரு வெளவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும் கொசுக்களையும் பிடித்து உண்டு விவசாயம் செழிக்க நமக்கு உதவுகிறது.
பனையின் தலைப்பகுதியில் அணில்களும் எலிகளும் கூடு அமைத்து வாழ்கின்றன. மேலும் உயரப் பறக்கும் பறவைகளான பருந்துகளுக்கும் வான்பாடி பறவைகளுக்கும் இருப்பிடமாக பனை விளங்குகிறது. பனை ஓலையின் நுனியில் தூக்கணாங்குருவிகள் தங்களின் சிறப்புமிக்க கூடுகளைப் பெருமளவு அமைத்து கூட்டாக வாழ்கின்றன. பகல் பொழுதில் வயல்களில் இருக்கின்ற பூச்சிகளையும், கூட்டுப்புழுக்களையும் உண்டு விவசாயத்திற்கு பல நன்மைகளைச் செய்கின்றன.
ஒரு பனை குறைந்தது 30 அடி உயரத்திற்கு வளருமாதலால் பல உயிரினங்களுக்கு இருப்பிடங்களாகவும் கூடுகளை அமைத்து தங்களது இனத்தை விருத்தி செய்யவும், எதிரிகளிடமிருந்து காக்க உதவும் அரணாகவும் பனை விளங்குகிறது.
"இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற வாசகம் நடமாடும் கறுத்த யானைக்கு மட்டுமல்ல என்றும் நிலையாக கறுத்து உயர்ந்து நிற்கும் பனைமரத்துக்கும் பொருந்தும்.
ஒரு பனை உயிர்நீத்து தலை வீழ்ந்த போதிலும் பனையின் பட்டுப்போன மரப்பகுதி பல பறவைகளுக்கு கூடுகளை அமைத்து முட்டையிட்டு குஞ்சுகள் வளர்க்கச் சிறந்த பாதுகாப்பான இடமாக இருப்பதால் பல பறவைகள் ஓர் மாடி வீட்டில் வசிப்பது போல கூட்டமாக வாழ்கின்றன. தற்போது அருகி வரும் உயிரினங்களான பச்சைக் கிளிகள், பனங்காடைகள், வானம்பாடிகள், மைனாக்கள், ஆந்தைகள், வெளவால்கள், உடும்பு, மரநாய் போன்றவற்றின் கடைசி இருப்பிடம் பனைதான்.
இப்படி எண்ணற்ற சிறப்புகளை நமக்கு மட்டுமல்லாது நம்மைச் சுற்றி வாழ்கின்றப் பல உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் பனையைக் காப்போம்!

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

சிக்கிம் - இயற்கை வேளாண்மை

இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒதுங்கி நிற்கும் மாநிலமான சிக்கிம்.

முதல்வரின் முழு முயற்சி

இதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் அந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங். தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கும் இவர், அடிப்படையில் ஒரு விவசாயி. உணவையும் நிலத்தையும் நஞ்சாக்கும் நவீன விவசாயத்திலிருந்து மாற்றத்தை விரும்பிய பவன்குமார், 2003-ல் சிக்கிம் மாநிலத்தை ’ஆர்கானிக் ஸ்டேட்’ எனச் சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார். ‘மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ‘ஒரு லட்ச ரூபாய் அபராதம்; மூன்றாண்டுகள் சிறை தண்டனை’எனவும் தடாலடியாக அறிவித்தார்.

வழக்கம் போல இந்த அறிவிப்பு அரசியலாக்கப்பட்டு எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட்டன. எதைப்பற்றியும் கவலைப்படாத பவன்குமார், தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ‘ஆர்கானிக் ஸ்டேட் போர்டு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவது என தீர்மானித்துக் கொண்டு செயலில் இறங்கியது இந்த வாரியம்.

மத்திய மானியம் மறுப்பு

ஒரு பக்கம் இயற்கை வேளாண்மையை ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம், மறுபுறம் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கும் இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கும் தாராளமான மானியங்களை வழங்கியது மாநில அரசு. மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களும் 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களும் அரசால் நிறுவப்பட்டன. இயற்கை உரத் தயாரிப்பு முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளால் 2009-ம் ஆண்டு இறுதிக்குள் எட்டாயிரம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாற்றப்பட்டன. இதற்கிடையே, 2006-07-ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மானியத்துடன் கூடிய ரசாயன உரக் கோட்டாவை வேண்டாம் என்று அறிவித்தார் பவன்குமார். அடுத்தகட்டமாக ஓராண்டுக்குள் 14 ஆயிரம் ஏக்கரை நஞ்சில்லா பூமியாக மாற்றுவது எனத் திட்டமிடப்பட்டு, அதுவும் நிறைவேற்றப்பட்டது.

உயிர் கிராமங்கள்

இதன் தொடர்ச்சியாக ‘சிக்கிம் ஆர்கானிக் மிஷன்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு இயற்கை வேளாண் முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்தக் கிராமங்களுக்கு ‘பயோ வில்லேஜ்’ என்று அழைக்கப்பட்டன. நல்ல திட்டங்கள் பலன் தராமல் தோற்றுப்போனதற்குக் காரணமே தொடர் ஆராய்ச்சிகளும் வளர்ச்சியும் இல்லாமல் போனதுதான்.

இதைப் புரிந்துகொண்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும், Center Of Excellence For Organic Farming என்ற ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். இத்தனை முன்னேற்பாடுகளுடன் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லா விவசாயப் பூமியாக மாற்றத் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாகச் சாதித்தும் காட்டியிருக்கிறது பவன்குமார் சாம்லிங் அரசு.

தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் இப்போது சிக்கிம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் மகத்துவம் புரிகிறது. இவர்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் பொருட்களை வாங்குவதற்கு டெல்லி, மத்திய ஆசிய நாடுகளில் தவம் கிடக்கிறார்கள்.

எடுபடாத எதிர்ப்பு

அண்மையில் சிக்கிம் சென்றிருந்த தேசியப் பிற்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன், அங்குள்ள இயற்கை வேளாண் நிலங்களையும், விவசாயிகளையும் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்:

’’நானும் ஒரு இயற்கை விவசாயிதான். அந்த ஆர்வத்தில் சிக்கிம் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினேன். சிக்கிமின் சில மலைப் பகுதிகளில் வாழும் ஒருசிலர் இயற்கை விவசாயத்தை எதிர்த்தாலும், அது எடுபடவில்லை. சிக்கிம் மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இயற்கை வேளாண்மை மூலம் கடந்த ஆண்டில் மட்டுமே 80 ஆயிரம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சிக்கிம் விவசாயிகள் உற்பத்தி செய்திருக்கிறார்கள். இதில் இஞ்சி 45,890 மெட்ரிக் டன், மோட்டா ரக மிளகு 3,510 மெட்ரிக் டன், மஞ்சள் 2,790 மெட்ரிக் டன், சன்ன ரகக் கோதுமை 4,100 மெட்ரிக் டன்.

வருடத்தில் மூன்று மாதங்கள் அங்கே கடும் குளிர் நிலவும். அதை சமாளிப்பதற்காக உடலுக்குக் கேட்டை உண்டாக்காத, ரசாயனம் கலக்காத ‘பயோ விஸ்கி’யையும் அங்கே தயாரிக்கிறார்கள்.

இயற்கை உரத் தொழிற்சாலை

பயோ ஃபெர்ட்டிலைசர்ஸ் என்று சொல்லப்படும் இயற்கை உரம் தயாரிக்கும் பெரும் தொழிற்சாலையை அரசே நிறுவியிருக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 3000 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்க முடியும். தெற்கு சிக்கிமில் ராவங்லா என்ற இடத்தில் 440 ஏக்கரில் அரோமா ஆர்கானிக் தேயிலைத் தோட்டத்தையும் அரசு நடத்துகிறது. இங்கு விளையும் உலகத் தரம் வாய்ந்த தேயிலை பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மிகவும் பின் தங்கிய சிக்கிம் மக்கள் ரசாயனத்தின் ஆபத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால், நாம் அது குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது” என்கிறார் கார்வேந்தன்.

ஜனவரி 18-ம் தேதி, சிக்கிமில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் சாதித்த பவன்குமார் சாம்லிங்குக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

எப்போது மீள்வோம்?

“பசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை. அதிக மகசூல் என்று ஆசைகாட்டி நிலங்களையும் உண்ணும் உணவையும் விஷமாக்கி விட்டார்கள். ரசாயன உரங்கள், உணவு உண்ணும் அத்தனை உயிர்களையும் சிறுகச் சிறுகக் கொல்கின்றன. ரசாயன உரங்களை ஒழிக்கப் போராடுவதுதான் இப்போது முக்கியம்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள். இதற்கு ரசாயன உரங்களும் முக்கியக் காரணம். சிக்கிமைத் தொடர்ந்து உத்தராகண்ட், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன. ராஜஸ்தான், பஞ்சா மாநிலங்களில் இது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால், வளமான விவசாயப் பூமியைக் கொண்ட தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த புரிதல் வேளாண் அதிகாரிகளுக்கே இல்லையே” என்கிறார் உழவர் உழைப்பாளர் கூட்டமைப்பினர்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

வியாழன், 11 பிப்ரவரி, 2016

வீட்டிற்க்கொர் #பசு வளர்போம்..

நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள்,

 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன.

இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.

இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. 

இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.

இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. 

இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். 

இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.

அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். 

இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். 

இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்.
இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான,

 கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். 

அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.

ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் ,lசெய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். 

இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?

சிந்திப்போம் தாமதிக்காமல் குறைந்து வரும் நமக்காக இயற்கை அளித்துள்ள #பசுதெய்வத்தை காப்போம்.

வீட்டிற்க்கொர் #பசு வளர்போம்..

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

நிலம் சம்பந்தப் பட்ட சொல் விவரங்கள்


பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடையகட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது

புதன், 27 ஜனவரி, 2016

விவசாயி ஒருவரின் அரிய கண்டுப்பிடிப்பு – மூலிகை தெளிப்பு

விவசாயி ஒருவரின் அரிய கண்டுப்பிடிப்பு – மூலிகை தெளிப்பு
விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் அறிவியல் அறிஞர்கள் மற்றும் அத்துறை சார்ந்த நிபுணர்களால் அங்கீகரிக்கப்படுவதில்லை இதற்கு காரணம் ஆய்வறிக்கை முடிவுகள், எழுத்து மற்றும் செயல்பூர்வமான விளக்கங்கள் ஆகியவை இல்லாததே ஆகும். ஆனால் இவ்வாறான கண்டுபிடிப்புகள் விவசாயிகளின் மத்தியில் மிக குறுகிய காலத்தில் பிரபலமடைந்து அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு சிறந்த சாட்சி ஆகி விடும்.
erodeஇதற்கு ஒரு சிறந்த உதாரணம், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கொடுமுடி கிராமத்தில் உள்ள விவசாயி K. செல்லமுத்து ஆவார் .தென்னை மரத்தில் காய்களை பாதிக்கும் Eriophyd mite எனப்படும் ஒருவகை ஒட்டுண்ணி பூச்சிகளை தடுக்க இவர் ஒரு மூலிகை திரவ தெளிப்பு கண்டுபிடித்து பல அறிவியல் வல்லுனர்களின் கடும் விமரிசனத்துக்கு ஆளானார் .
இந்த மூலிகைத் தெளிப்பு இரசாயன நச்சு கலந்த பூச்சி கொல்லி மருந்துகளைப்போல நமது நிலத்துக்கும், பயிருக்கும், மற்ற உயிர்களுக்கும், மனிதர்களுக்கும் எந்த பக்க விளைவையும் தீங்கையும் ஏற்படுத்தாதது என்கின்றார் கொடுமுடியை சேர்ந்த மருத்துவர் மற்றும் இயற்கை விவசாயி Dr. நடராஜன்.
செல்லமுத்து சுமார் மூன்று வருட காலம் நச்சு தன்மை மிகுந்த பூச்சிகொல்லிகளின் விளைவால் பக்கவாதம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இரசாயன பூச்சி மருந்துகளின் பக்க விளைவுகளுக்கு இவர் ஒரு உதாரணம் என்கின்றார், இவருக்கு வைத்தியம் செய்த மருத்துவர் நடராஜன். இவரது வேலை பூச்சி மருந்துகளை தெளிப்பது . சுமார் பத்தாண்டுகளுக்கும் மேல் இவர் இப்பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது பகுதியில் மஞ்சள் போன்ற எளிதில் பூச்சி தாக்கும் பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க பெருமளவில் இரசாயன மருந்துகள் தெளிக்கிறார்கள். இந்த மருந்துகள் பல பக்க விளைவை உண்டாக்குகின்றன. சுமார் மூன்று வருடங்கள் பூச்சி கொல்லி மருந்தின் விளைவுகளால் பக்கவாதத்தால் பாதிக்கபட்டிருந்தாராம் செல்லமுத்து.
அவ்வேளையில் பாதிப்பேற்படுத்தாத பூச்சி மருந்துகளை கண்டுபிடிக்க முற்பட்டு தற்செயலாக ஏற்பட்ட ஒரு அரிய கண்டுபிடிப்பு தான் இந்த மூலிகை தெளிப்பு!.
ஒரு கிலோ அளவு சீத்தாபழ இலைகள், பீநாரி சங்கு, மஞ்சள் வேர்க்கிழங்கு, கற்றாழை, நொச்சி இலை, வேப்பம் விதைகள், நீல எருக்கு ஆகியன அனைத்தையும் தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுக்க வேண்டும். சுமார் ஐந்து லிட்டர் அளவு சாறு கிடைக்கும். இந்த சாறுடன் 15 லிட்டர் அளவு நீர் சேர்த்து கலக்கி இருபது லிட்டர் அளவுக்கு தயார் செய்துக் கொள்ளவேண்டும்.
தென்னை மர உச்சியில் தேங்காய் அறுவடைக்கு பின்னர் தலா இரண்டு லிட்டர் அளவு வீதம் ஒவ்வொரு மரத்துக்கும் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை இதனை செய்ய வேண்டும் இவ்வாறு மூலிகை பூச்சிக் கொல்லி தெளிக்கப்பட்ட இரண்டாயிரம் தென்னை மரங்கள் நல்ல செழிப்புடன் எவ்வித பாதிப்பின்றி இருப்பதாகவும், இதனால் முந்நூறு தென்னை விவசாயிகள் இதனை பின்பற்றி பயனடைந்துள்ளதாகவும் கூறுகிறார் செல்லமுத்து .
தொடர்ந்து இப்படி இந்த கலவையை ஆரம்பத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் பிறகு ஆண்டுக்கு இருமுறையும் தெளிப்பதன் மூலம் ஒட்டுண்ணி பாதிப்பில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்கலாம் என்கின்றார் செல்லமுத்து .
மற்றொரு மூலிகை பூச்சி கொல்லி:
ஒரு கிலோ பூண்டு, அரை கிலோ இஞ்சி, அரை கிலோ புகையிலை, அரை கிலோ பச்சை மிளகாய், இருநூறு கிராம் மிளகு, இருநூறு மில்லி லிட்டர் வேப்பெண்ணெய், முப்பது கிராம் காதி சோப் இவற்றை எடுத்துக்கொள்ல வேண்டும். பூண்டினை முதல் நாள் இரவே நூறு மில்லி லிட்டர் மண் எண்ணெயில் ஊறவைக்கவேண்டும். அதனை அடுத்த நாள் மிளகாய் மற்றும் மிளகுடன் சேர்த்து அரைக்க வேண்டும். புகையிலையை ஒரு நாள் முழுதும் நீரில் ஊறவைத்து வடிகட்டி அத்துடன் வேப்ப எண்ணையை கலந்து வைத்து அதில் அரைத்த பூண்டு மிளகாய் மற்றும் மிளகு கலவையையும் கலந்து அத்துடன் காதி சோப்பையும் சேர்க்க வேண்டும். இதில் சுமார் ஏழு லிட்டர் அளவு கலவை கிடைக்கும். இது ஓர் ஏக்கர் நிலத்துக்கு உபயோகப்படும். பத்து லிட்டர் நீரில் எழுநூறு மில்லி லிட்டர் கலவையினை கலந்து தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆரம்பத்தில் மிகவும் பயந்த விவசாயிகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்த ஆரம்பித்து பயன் பெற்றுள்ளார்கள்.
” தற்செயலாய் நிகழ்ந்த அரிய கண்டுபிடிப்பு”
நாம் உணவுக்கு பயன்படுத்தும் பெருங்காயம், பயிர்களின் அதிக விளைச்சலுக்கும் மகசூலுக்கும் உதவுகின்றதாம். இவர் எதேச்சையாக பக்கத்து நிலத்து விவசாயி ஒருவருக்கு வீணாகக் கிடந்த அரை கிலோ பெருங்காயத்தை கொடுத்து அவரது நிலத்தில் வீச சொல்லியிருக்கின்றார். இவர் சாதாரணமாக செய்த ஒன்று எதிர்பாராமல் நன்மை புரிந்துள்ளது. அந்நிலத்தில் விளைந்த சுரைக்காய்கள் பூச்சிகளால் பாதிக்கபட்டிருந்தன .இந்த பெருங்காயம் பூச்சிகளை அழித்து அதிக மகசூலையும் தந்துள்ளது .
இதனையறிந்த பக்கத்துக்கு ஊரைச் சேர்ந்த மற்றொரு விவசாயி தனது இரண்டரை ஏக்கர் மல்லி தோட்டத்துக்கு இதே முறையை பின்பற்ற அவருக்கும் மல்லிப்பூவில் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது .
செல்லமுத்து இந்த பெருங்காய மருந்தை நெல், எள், கத்திரி, தக்காளி, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கும் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கின்றார். இவரால் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள பல விவசாயிகள் இந்த பெருங்காய மூலிகை மருந்தை பூச்சிக் கொல்லியாகவும் அதிக விளைச்சலுக்கும் பயன் படுத்துகிறார்கள்.
இவரது இந்த கண்டுபிடிப்பை கோவை வேளாண் பல்கலைகழகம் ஆய்வு செய்து பயிர்களுக்கு பயன்படுத்த இசைவு தந்து வழிமொழிந்திருக்கிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு: திரு. K. Chellamuthu, Karukkamapalayam, Oonchalur Post, Kodumudi via, Erode District, Tamil Nadu,

🌾🐮முர்ரா கன்றுகளுக்கான Calf Starter அடர் தீவனம்: வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

  🌾 🐮 முர்ரா கன்றுகளுக்கான Calf Starter  கன்று  அடர் தீவனம்: வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?  முர்ரா (Murrah) எருமைக் கன்றுகளின் விரைவான உடல...